Thursday, May 14, 2020

பருவம் அடைந்த பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு பொருட்கள்


ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கையில் உடல் ரீதியாக பெரிய மாற்றம் நிகழ்வது என்பது பூப்பெய்தும் நிகழ்வு ஆகும். இது முதிர்ந்த பெண்ணாக தன்னை உருமாற்றி கொள்வதற்கான தொடக்கப்புள்ளி.


இப்படி பருவம் அடைந்த பெண்களின் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களாவன; புரதசத்து, சுண்ணாம்பு சத்து, இரும்பு, போலிக் அமிலம் போன்றவை. பருவம் அடைந்த பெண்கள் சத்துள்ள உணவாக சாப்பிட வேண்டும்.

இதற்காக கெட்ட கொழுப்பு, காபோஹைட்ரேட் அடங்கிய உணவுகளை அளவுக்கு மீறிச் சாப்பிடக்கொடுக்கிறார்கள். இதனால் சரியான எடையை பராமரிக்க முடியாமல், உடல் பருமன் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

இதன்காரணமாக உடல் எடை அதிகரித்து, மாதவிடாய் தள்ளிப்போவது, தைராய்டு, இடுப்புவலி, ரத்தசோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே பருவம் அடைந்த பெண்கள் உடலுக்குத் தேவையான அளவு மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியமாகும்.

விளையாட்டுத்தனமாக துள்ளித்திரிந்த குழந்தை, பருவம் அடைந்த பிறகு உணவு விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் பருவ பெண்கள் சாப்பிட வேண்டிய சில இயற்கை மருத்துவ உணவுகள் பற்றி பாப்போம்.

⏩️எள் உருண்டை:
தேவையான பொருட்கள்
கருப்பு எள்
வெல்லம்
ஏலக்காய்
நல்லெண்ணெய்

செய்முறை
முதலில் எள் வறுத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடி செய்த எள்ளுடன் வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடி இவற்றை சேர்த்து ஒரு சேர நன்கு பிசையவும்.
பிசையும் போது எள்ளில் இருந்து சிறிது எண்ணெய் வெளியேறும். இதனுடன் சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து உருண்டையாகவோ அல்லது அப்படியே கலவையாகவோ சாப்பிடலாம்.

இந்த எள் உருண்டையை தின்பண்டமாக பெண்கள் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பலம் சேர்க்கிறது. எள் உருண்டை இடுப்புக்கு பலம் தரக்கூடியதாகும். இது முறையான உதிரப்போக்கை ஏற்படுத்தி, உடலில் உள்ள கெட்ட இரத்தத்தை வெளியேற்ற உதவுகிறது. மேலும் ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது.

குறிப்பு
எள் உருண்டையை பெண்கள் கருவுற்ற காலங்களிலும், மாதவிலக்கு நேரங்களிலும் எடுக்காமல் இருப்பது மிகவும் நல்லது.

⏩️கருப்பு உளுந்து களி:

தேவையானவை
கருப்பு உளுந்து
வெல்லம்
ஏலக்காய்
நெய்
ஏலக்காய்
செய்முறை
முதலில் உளுந்தை வறுத்துப் பொடி செய்ய வேண்டும். பின் இந்த உளுந்து மாவுடன், தேவையான அளவு நீர் சேர்த்து கலக்கி, கொதிக்க வைக்கவும். கொதித்து பொங்கி வரும்போது, சிறிதளவு வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும்.

கிளறும் போது இது அல்வா பதத்தில் வரும். அந்த வேளையில் நெய் விட்டு மீண்டும் அதனை கிளற வேண்டும். இப்போது உளுந்தம் களி ரெடி. இது உடலுக்கு நல்ல பலம் தரும். இதனை சிறு பருவம் முதல் பெண்கள் சாப்பிட்டு வரும்போது, உடலுக்கு தேவையான மாவுசத்து மற்றும் புரதம் இதிலிருந்து கிடைக்கிறது.

இந்த உளுந்தம் களி பூப்பெய்த பெண்களின் சீரான மாதவிடாய் மற்றும் 40 வயதிற்கு மேல் ஆன பெண்களின் உடல் பலத்திற்கு மிகவும் உதவுகிறது. மேலும் பெண்களின் மூட்டு வலி, எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த மருந்தாகிறது. மற்றும் உடல் சூட்டினை தணிக்க செய்வதோடு, இரத்த கட்டிகளுக்கு மருந்தாகிறது.

⏩️முருங்கை கீரை மசியல்
தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை
பூண்டு
வரமிளகாய்
கடுகு
உளுந்தம்பருப்பு
உப்பு
நல்லெண்ணெய்

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு உளுந்து, கடுகு இரண்டையும் பொரிய விடவும். பின்னர் முருங்கைக்கீரை சேர்த்து நீர் விட்டு கொதிக்க விடவும். இதனுடன் வரமிளகாய், பூண்டு இரண்டையும் அரைத்து, முருங்கைக்கீரையுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து விடவும். இப்போது முருங்கைக்கீரை மசியல் ரெடி ஆயிடிச்சு.
முருங்கைக்கீரையில் இரும்புசத்து அதிகமாக உள்ளது. இதை வாரத்திற்கு நான்கு நாட்களாவது சாப்பிட்டு வரும் போது, உயிர் சத்துக்கள், சுண்ணாம்புச்சத்து, தாது உப்பு, இரும்புசத்து, வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியன உடலில் சேர்ந்து, உடலுக்கு நல்ல வலு சேர்க்கிறது.

மேலும் முருங்கைக்கீரை பயன்படுத்துவதன் மூலம் வளரும் இளம்பெண்களுக்கு இரத்த விருத்தி அடைய செய்யும். குழந்தை பேறு அடைந்த பெண்களுக்கு பால் நன்றாக சுரக்கவும் முருங்கைக்கீரை உதவுகிறது.

நீங்களும் இந்த உணவுகளில் ஒன்றையாவது பின்பற்றினால் உடல் நலத்தை பேணி பாதுகாத்துக் கொள்ளலாம். ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...