Monday, May 11, 2020

மாதவிடாய்க் கால வலியைப் போக்க எளிய வழிகள்!



சுறுசுறுப்பாகச் சுற்றி வரும் ஒரு பெண்ணை மாதவிடாய், சட்டென்று முடக்கிவிடும்.  அந்தச் சமயத்தில் ஏற்படும் பல்வேறு உபாதைகள் பெண்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடைய வைத்துவிடும். மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் உபாதைகள் எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. நபருக்கு நபர் வேறுபடும்.

 மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலிகளை மருத்துவச் சொற்களில் 'டிஸ்மெனோரியா' (Dysmenorrhea) என்கின்றனர். ஒற்றைத் தலைவலி, அடிவயிற்றில் வலி, முதுகு வலி, வாந்தி, கால் வலி என வெவ்வேறு பிரச்னைகள் பெண்களுக்கு ஏற்படும். மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலி, உபாதைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள சில பெண்கள் மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். இது தவறான அணுகுமுறை. வலிக்கான மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.


மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலிக்கு சோடா, குளிர்பானங்கள் போன்றவற்றைக் குடிக்கும் பழக்கம் சில பெண்களுக்கு இருக்கிறது. குளிர் பானங்கள் குடிப்பதால் உடனடியாக மூளைக்குச் சற்று புத்துணர்வு கிடைக்கும். குளிர்பானத்தில் இருக்கும் சர்க்கரை உடலுக்கு உடனடி ஆற்றல் தரும். அனைத்துக் குளிர்பானங்களிலும் வாயு சேர்க்கப்படுவதால் (Carbonated drinks) தற்காலிகமாக வயிறு உப்புசத்தை நீக்கும். ஆனால், குளிர்பானங்கள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும், அதில் சேர்க்கப்படும் வாயுவால் வயிற்றுப் புண் (Stomach Ulcer) ஏற்படும்.

இதைப் பெண்கள் பருகும்போது எலும்பு பாதிக்கப்பட்டு, எலும்பு தொடர்பான நோய்கள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, மாதவிடாய் நாள்களில் முடிந்தவரை ஓய்வு மற்றும் சத்தான உணவுகள் எடுத்துக்கொண்டாலே வலிகளில் இருந்து தீர்வு பெறலாம்" என்கிறார் சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன்.


மாதவிடாய் சமயத்தில் வலி ஏற்படாமல் தடுப்பதற்கும், வலி ஏற்பட்டால் அதைக் கையாள்வது குறித்தும் அவரே விளக்குகிறார். 


பெண்கள் வாழ்க்கை முறைகளில் சிறிய மாற்றங்களைச் செய்தால் மாதவிடாய் சமயத்தில் வலி ஏற்படாமல் தடுக்க முடியும். மாதவிடாய் வருவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே, ஒரேநிலையில் வெகு நேரம் நிற்பதோ அல்லது உட்காருவதோ கூடாது. அவ்வப்போது குனிந்து, நிமிர்ந்து சிறிய சிறிய வேலைகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது வயிற்றுப் பகுதி மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் அசைவு ஏற்படும். இது மாதவிடாய் நாள்களில் வரும் வலியைத் தடுக்கும்.


உடலில் சூடு அதிகரிப்பதால் தான் மாதவிடாய் நாள்களில் வலி அதிகம் ஏற்படுகிறது. நாற்காலியில் வெகுநேரம் உட்காருவது, காற்றோட்டமில்லாத ஆடைகளை அணிவது போன்றவற்றால் உடல் சூடு அதிகரித்து, கர்ப்பப்பையைப் பாதிக்கும். இதனால் மாதவிடாய் நாள்களில் அடிவயிற்றில் வலி ஏற்படும். வாரத்துக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம். உடல் சூட்டைக் குறைக்கலாம்.


மாதவிடாய் நாள்களில் ஏற்படும் வலி, அதிக ரத்தப்போக்கைத் தடுக்கும்  வழிமுறைகள்:

1) நீர்ச்சத்துள்ள உணவுகள் - நீர்ச்சத்து மிக்க உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது பொடியாகவோ காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இது உடல் சூட்டைத் தடுக்கும். மாதுளம் பழத்தை
பழமாகவோ அல்லது சாறாகவோ எடுத்துக்கொள்ளலாம். இது உடலில் நீர்ச்சத்து குறையாமல் தடுக்கும்.

2)துவர்ப்பு உணவுகள்- மாங்கொட்டை (அவித்ததோ அல்லது பச்சையாகவோ), மாதுளம் பழத்தின் உள்பகுதி தோல், வாழைப்பூ ஆகியவற்றைச் சாப்பிடலாம். இவற்றில் இருக்கும் துவர்ப்புச் சுவை வயிறு உப்புசம் மற்றும் உடம்பில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி வலியிலிருந்து ஆறுதல் அளிக்கும்.

3) பிஞ்சு காய்கறிகள் - மாதவிடாய் நாள்களில் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு அடிவயிற்றில் வலி ஏற்படும். மலச்சிக்கலைத் தவிர்க்க நார்ச்சத்துள்ள பீன்ஸ் போன்ற காய்களை உண்ண வேண்டும். முற்றல் காய்கறிகளைத் தவிர்த்து பிஞ்சு காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நார்ச்சத்துள்ள பயிர் வகைகள் மற்றும் பழ வகைகளையும் உண்ணலாம். இதனால் வயிற்றில் இருக்கும் கழிவுகள் மற்றும் கர்ப்பப்பை சுத்தமாகி மலச்சிக்கல் நீங்கும்.

4)செக்கு நல்லெண்ணெய்- செக்கு நல்லெண்ணெய்யை மாதவிடாய் நாள்களில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி குடித்து வந்தால் உடலில் வலிமை ஏற்படும். அதில் இருக்கும் வைட்டமின் 'சி' எலும்புகளுக்கு வலிமைச் சேர்க்கும்.

5) கறிவேப்பிலை- கறிவேப்பிலையைத் தேங்காய் சேர்க்காமல் துவையல் செய்து சாப்பிட்டால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அனைத்து விதமான வலிகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
மோர்- மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் உடல் சூட்டைத் தவிர்க்க, ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை மோர் பருகலாம். வெள்ளை பூசணியை உணவில் சேர்த்துக்கொள்ளுதல், குளிர்ந்த நீரில் குளித்தல், ஆகியவையும் உடல் சூட்டைக் குறைத்து வயிற்று வலியைப் போக்கும்.
உளுந்தங்கஞ்சி- உளுந்தங்கஞ்சியுடன் பனை வெல்லத்தைச் சேர்த்துச் சாப்பிட்டால் இடுப்பு எலும்பு வலுவாகும். இதனால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் இடுப்பு வலி நீக்கும்.


⏩️⏩️பலம் தரும்  கஞ்சி



மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் சோர்வுக்கு,   இயற்கையான தீர்வான , புரதம் நிறைந்த உணவான, வீட்டிலேயே இருக்கூடிய உளுந்தம்பருப்பு பால் கஞ்சி.
.
தேவையானவை:
வெள்ளை உளுந்து - கால் கப்
காய்ச்சிய பால் - ஒரு கப்
கருப்பட்டி - 60 கிராம்
பூண்டு தோல் நீக்கியது - 4 பல்
தண்ணீர் - ஒன்றரை கப்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன்
புழுங்கல் அரிசி - 2 டீஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்


செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து, வெந்தயம், வெள்ளை உளுந்து, அரிசி, பூண்டு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக, பொன்நிறமாக வறுத்தெடுத்து ஆறவைக்கவும். பின் அடிகனமான ஒரு பாத்திரத்தில் வறுத்துவைத்த வெந்தயம், உளுந்து, அரிசி, பூண்டுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் குழைய வேகவிடவும். உளுந்துக் கலவை வெந்ததும் அத்துடன் ஏலக்காய்த்தூள், கருப்பட்டி, தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். இதில் பால் சேர்த்துச் சாப்பிடவும்.

நன்றி :விகடன் ஹெல்த்

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...