Monday, May 11, 2020

வீட்டிலே செய்வோம் டோனர்

சருமத்தை இளமையாக வைத்திருக்கும்  டோனர்கள்.. வீட்டிலேயே செய்யலாம்!


முக அழகுக்கு காஸ்ட்லியான காஸ்மெடிக்ஸ், பார்லர் சிகிச்சைகளைவிட, அடிப்படை சருமப் பராமரிப்பான கிளென்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்ச்சரைசிங்தான் அவசியம். கிளென்சர் என்பது சருமத்தின் ஆழத்தில் படிந்துள்ள அழுக்கை நீக்கிச் சுத்தப்படுத்துவது. டோனர் என்பது சருமத் துவாரங்களை மூடச்செய்து இறுகச் செய்வது. மாய்ஸ்ச்சரைசர் என்பது சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைப்பது. கிளென்சர், மாயிஸ்ச்சரைசரின் முக்கியத்துவம் தெரிந்த அளவுக்குப் பலருக்கும் டோனரின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு இல்லை.
சரும வகையைத்  தெரிந்துகொள்வது அவசியம்


``நம் சருமத்தில் இயற்கையாவே சீபம் என்னும் எண்ணெய் சுரக்கும். சருமத்தில் இருக்கும் நுண்ணிய துவாரங்கள் வழியாக கிருமிகள் ஊடுருவாமல் பாதுகாப்பதுதான் சீபத்தின் வேலை. சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்கவும் சீபம் உதவும். இது குறைவாகச் சுரந்தால் வறண்ட சருமம், சரியான அளவில் சுரந்தால் நார்மல் சருமம், அதிகமாகச் சுரந்தால் எண்ணெய்ப்பசை சருமம் எனத் தெரிந்துகொள்ளலாம்.

சருமத்தைச் சுத்தப்படுத்த பயன்படுத்தும் கிளென்சரில் காரத்தன்மை அதிகமாக இருக்கும். இது சருமத்துவாரங்களை விரிவடையச் செய்து அடைந்திருக்கும் அழுக்குகளை வெளியேற்றும். விரிந்த சருமத்தை அப்படியே விட்டால் தூசு மற்றும் கிருமிகள் சருமத்துக்குள் ஊடுருவிடும். அதனால் கிளென்சிங் செய்ததும் kat டோனர் பயன்படுத்த வேண்டும்.


டோனர் சருமத்துவாரங்களைச் சுருங்கச்செய்து சருமத்தை இறுக்கமாக்கும். இது பார்ப்பதற்கு தண்ணீர் மாதிரி இருக்கும். இதைத் தொடர்ந்து மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்த வேண்டும். CTM (Cleansing- Toning- Moisturising) எனப்படும் இந்த ரொட்டீனை முறையாகப் பின்பற்றினாலே சருமம் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்'' என்று சொல்லும் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா, வீட்டிலேயே செய்யக்கூடிய டோனர் வகைகளை செய்முறையுடன் விளக்குகிறார்.

➡️பன்னீர் டோனர்



பன்னீர் ஒரு சிறந்த டோனர். பூக்கடைகளில் மாலை செய்ய உபயோகப்படுத்தும் சாதாரண பன்னீர் ரோஜா இதழ்கள் இருந்தாலே போதும், வீட்டிலேயே சுத்தமான பன்னீரை சுலபமாகத் தயாரித்துவிடலாம். ஒரு லிட்டர் தண்ணீரைக் கொதிக்கவைத்து இறக்கி, சூடு ஆறும்முன் 15 கிராம் ரோஜா இதழ்களை அதில் போட்டு பாத்திரத்தை மூடி வையுங்கள்.
இரண்டு மணிநேரம் கழித்து மூடியைத் திறந்து பார்த்தால், தண்ணீர் வெளிர் பிங்க் நிறத்தில் மாறி இருக்கும். இதை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி மூடி ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது பஞ்சை பன்னீரில் நனைத்து முகம் முழுவதும் பூசி அப்படியே விட்டுவிட்டால், சருமம் இறுக்கமாகவும் பொலிவாகவும் மாறும்.
கண்களில் கருவளையம், கண்களுக்குக் கீழ் பை போன்ற வீக்கம் இருப்பவர்கள், ரோஜா மற்றும் சாமந்திப் பூ இதழ்கள் இரண்டையும் சேர்த்து 15 கிராம் எடுத்துக்கொள்ளவும். ஒரு லிட்டர் கொதிக்கவைத்த தண்ணீரில் பூ இதழ்களைப் போட்டு மூடிவைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து வடிகட்டி பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தவும். தொடர்ந்து பயன்படுத்தும்போது கண்களின் கருவளையம் மற்றும் வீக்கம் குறைந்து கண்கள் பிரகாசமாகும்.

➡️கற்றாழை டோனர்
சோற்றுக் கற்றாழை எனப்படும் அலோவேராவை வீட்டில் ஒரு சிறு தொட்டியிலேயே வளர்த்துவிட முடியும். தொட்டியில் வளரும் கற்றாழையிலிருந்து. தினமும் ஒரு துண்டை வெட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின் அதைக் குறுக்குவாக்கில் வெட்டி உள்ளிருக்கும் சதைப்பகுதியைத் தண்ணீரில் நன்கு அலசிக்கொள்ளவும். அதைக் கைகளால் மசித்து முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் அப்ளை செய்து அப்படியே விட்டுவிடவும். இது சருமத்தை டைட்டாக்கி, இளமையாக வைத்திருக்கும்.

➡️துளசி - புதினா டோனர்
எண்ணெய்ப்பசை சருமத்தினர், துளசி மற்றும் புதினாவிலிருந்து தயாரிக்கும் டோனரைப் பயன்படுத்தினால் சருமத்தில் சீபம் சுரக்கும் அளவைக் கட்டுப்படுத்தலாம். இதனால் எந்நேரமும் சருமம் எண்ணெய் வழியாமல், பொலிவுடன் இருக்கும்.
துளசி மற்றும் புதினா இரண்டையும் சேர்த்து ஒரு கைப்பிடி அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். கொதிக்கவைத்து இறக்கிய ஒரு லிட்டர் வெந்நீரில் துளசி மற்றும் புதினாவைச் சேர்த்து மூடிவிடவும். இரண்டு மணிநேரம் கழித்து வடிகட்டி பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளுங்கள்.
எண்ணெய்ப்பசை சருமத்தினர் மட்டுமல்லாமல், முகப்பரு, கரும்புள்ளிகள், பிளாக் ஹெட்ஸ் எனப் பிரச்னைக்குரிய சருமத்தினருக்கெல்லாம் இந்த டோனர் ஒரு வரப்பிரசாதம். தினமும் இதில் பஞ்சை நனைத்து முகத்தில் தடவிவர சருமப் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.

➡️லாவண்டர் டோனர்
கடைகளில் கிடைக்கக்கூடிய 150 மி.லி கொள்ளளவுள்ள ஸ்பிரே பாட்டிலும் காஸ்மெடிக் கடைகளில் கிடைக்கக்கூடிய லாவண்டர் ஆயிலையும் வாங்கிக் கொள்ளவும்.
லாவண்டர் ஆயில்
ஸ்பிரே பாட்டிலில் 20 சொட்டுகள் லாவண்டர் ஆயிலை விடவும். பிறகு ஸ்பிரே பாட்டிலில் ஐஸ் தண்ணீரை நிரப்பி ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளவும். நீங்கள் சோர்வாக இருக்கும்போதும் முகம் பொலிவிழந்து இருக்கும்போதும் இந்த ஸ்பிரே பாட்டிலில் உள்ள டோனரை முகத்தில் ஸ்பிரே செய்துகொண்டால் இன்ஸ்டன்ட் புத்துணர்வு கிடைக்கும்.

➡️வெட்டிவேர் - ரோஸ் டோனர்
ஃபிரிட்ஜ் அறிமுகமாவதற்கு முன், மண்பானையில் நீரூற்றி அதில் வெட்டிவேரைப் போட்டுவைத்து அந்த நீரை குடித்து வந்தார்கள். சுவையும் மணமும் சேர்ந்து குடிக்கவும் குளுமையாக இருக்கும் வெட்டிவேர் தண்ணீர். உடலுக்குக் குளிர்ச்சி தரும். கோடைக்காலத்தில் வியர்க்குரு பாதிப்பிலிருந்து தப்பிக்க, வெட்டிவேர் சிறந்த பலனளிக்கும்.
சுத்தப்படுத்திய வெட்டிவேர் ஒரு கைப்பிடி எடுத்துக்கொள்ளவும். கொதிக்கவைத்து இறக்கிய வெந்நீரில் வெட்டிவேரைப் போட்டு மூடிவைக்கவும். இரண்டு மணிநேரத்துக்குப் பிறகு இந்த நீரை வடிகட்டி அதில் 20 சொட்டுகள் ரோஸ் ஆயில் சேர்த்துக் கலந்துகொள்ளவும்.
இந்தக் கலவையை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளவும். குளித்து முடித்து உடலைத் துடைத்ததும் இந்த வெட்டிவேர் தண்ணீரை முகம் மற்றும் உடல் முழுவதுமே ஸ்பிரே செய்துகொள்ளலாம். இது சருமத்தை வியர்க்குருவிலிருந்து பாதுகாப்பதுடன் துர்நாற்றத்தையும் போக்கும்.

➡️வெள்ளரி - லெமன் டோனர்
ஒரு வெள்ளரிக்காயைத் தோல் மற்றும் விதை நீக்கித் துருவிக்கொள்ளவும். இதைப் பிழிந்து சாறெடுக்கவும். ஃபிரிட்ஜில் வைக்கக்கூடிய ஐஸ் ட்ரேயின் ஒவ்வொரு குழியும் முக்கால்பாகம் நிரம்பும்வரை வெள்ளரிச்சாற்றை ஊற்றவும். பின்னர் மீதமிருக்கும் இடத்தில் எலுமிச்சை சாற்றை ஊற்றவும்.

➡️வெள்ளரி - லெமன் ஐஸ் கியூப்ஸ் 


ஐஸ் ட்ரேயை ஃப்ரீஸரில் வைத்து உறையவைக்கவும். தேவையான நேரத்தில் ஒரு ஐஸ் துண்டை எடுத்து, ஒரு துணியில் சுற்றி முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் ஒற்றி எடுக்கவும். இது சருமத்தை இறுகச் செய்வதுடன் சருமநிறத்தை மேம்படுத்திப் பளபளப்பைக் கூட்டும்.


வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் முன்னரும், வீட்டுக்குத் திரும்பிய பின்னரும் முகத்தை கிளென்ஸ் செய்யவும். பிறகு மேலே குறிப்பிட்டுள்ள டோனரில் உங்களுக்குப் பொருத்தமான டோனரை முகத்தில் அப்ளை செய்யவும்.
பொலிவான சருமத்துக்குப் பராமரிப்பு அவசியம்
கடைசியாக, உங்கள் சருமத்துக்குப் பொருத்தமான மாய்ஸ்ச்சரைசரை அப்ளை செய்துகொள்ளவும். வெளியே கிளம்பும் முன் மாய்ஸ்ச்சரைசருக்கு மேல் சன் ஸ்க்ரீன் லோஷனைக் கட்டாயம் அப்ளை செய்யவும். இதனால் முகம் எப்போதும் பளிச்சென பிரகாசிக்கும்.

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...