Wednesday, April 29, 2020

இனி வீசாதீங்க... !!



"அம்மா...மா..! தர்பூசணி விதையை முழுங்கிட்டேன்... வயித்துல மரம் முளைக்குமா?"

வீட்டில் இருக்கும் மழலைகளுக்கு ஏற்படும் பெரிய சந்தேகம் இது. இன்று பெரியவர்களாக மாறிப்போன குழந்தைகளும் இந்த சந்தேகத்துக்கு விடை தேடிவிட்டுத்தான் வந்திருப்பார்கள்.
எந்த விதையை விழுங்கினாலும் மரம் முளைக்காது என்பது நமக்குத் தெரியும். ஆனால், கோடையின் வரப்பிரசாதமாகக் கிடைக்கும் தர்பூசணி விதைகளைச் சாப்பிடுவதால் உடலுக்குப் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது பலர் அறியாதது.


தர்ப்பூசணிப் பழத்தில் 92 சதவிகிதம் நீர்ச்சத்து இருக்கிறது. கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் தர்பூசணிக்கு உண்டு. மேலும், புறஊதாக் கதிர்கள் சருமத்தைப் பாதிக்காமலும் தடுக்கும்.
தர்பூசணி பழத்தைச் சாப்பிடுகிறோம். அதிலிருக்கும் விதைகளைப் பெரும்பாலும் வீசிவிடுகிறோம். பூசணி விதைகள், ஆளி விதைகளைப் போன்று தர்பூசணி விதைகளிலும் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன.


தர்பூசணி விதைகளில் காணப்படும் சத்துகள் குறித்தும், அதை எப்படிச் சாப்பிடுவது என்றும் விளக்குகிறார் உணவியல் நிபுணர்
அபிராமி.


``தர்பூசணி விதைகளில் மிகவும் குறைவான கலோரி உள்ளது. மக்னீசியம், துத்தநாகம், இரும்புச்சத்து, புரதம், தாமிரம் உள்ளிட்ட பல்வேறு சத்துகள் அடங்கியுள்ளன. மக்னீசியம் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க உதவும்; எலும்புகளின் அடர்த்தியைப் பாதிக்கும் 'ஆஸ்டியோபோரோசிஸ்' போன்ற நோய்களுக்கு எதிராகப் போராடும். குறிப்பாக, எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தர்பூசணியில் உள்ள மக்னீசியம் பெரிதும் உதவியாக இருக்கும். இதிலுள்ள துத்தநாகம் ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்துக்குத் துணைபுரிவதுடன் குழந்தையின்மைக் குறைபாட்டைப் போக்கவும் உதவும்.

மக்னீசியம், இரும்புச்சத்து ஆகியவை சரும வறட்சியைப் போக்கி ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். இரும்புச் சத்து, தாமிரச் சத்து ஆகியவை முடி உதிர்வுக்குத் தீர்வாக அமையும். அவற்றில், வைட்டமின் பி சத்து அதிகமாக இருப்பதால் உடலில் சோர்வைப் போக்கி ஆற்றல் அளிக்கும். தர்பூசணி விதைகளில் நல்ல கொழுப்பு அதிகமாக உள்ளதால் செரிமான மண்டலம் நன்றாகச் செயல்படும்.
தர்பூசணி விதைகளில் உள்ள  ஃபோலிக் அமிலம் மூளை வளர்ச்சிக்கு உதவக்கூடியது என்பதால், அவற்றைக் குழந்தைகளுக்குத் தாராளமாகக் கொடுக்கலாம். கர்ப்பிணிகள் சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி மேம்படும். ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாகச் சாப்பிடலாம்.

எப்படிச் சாப்பிடுவது?
தர்பூசணி விதைகளைப் பச்சையாகவோ தயிர் அல்லது மோரில் கலந்தோ சாப்பிடலாம். வேர்க்கடலையை வறுப்பதுபோன்று இந்த விதைகளை எண்ணெய்சேர்த்தோ, சேர்க்காமலோ வறுத்துச் சாப்பிடலாம். நமக்கு விருப்பமான பழங்களைத் தேர்வுசெய்து அவற்றை வெட்டி பழக் கலவையாக்கி, அவற்றின்மீது தர்பூசணி விதைகளைத் தூவிச் சாப்பிடலாம். வறுத்த தர்பூசணி விதைகளுடன் சிறிது லவங்கப்பட்டைத் தூள், அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, மிளகுத் தூள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து சிற்றுண்டிபோலச் சாப்பிடலாம்.
தர்பூசணி விதைகளைச் சேமித்து வைக்க விரும்புபவர்கள் நன்றாக வறுத்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளலாம். பிறகு அவற்றைத் தேவையானபோது பயன்படுத்திக்கொள்ளலாம்" என்றார் அபிராமி.
பூசணி விதைகள், ஆளி விதைகள் உள்ளிட்ட வேறு விதைகள் கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால், தர்பூசணி விதைகள் கடைகளில் விற்கப்படுவதில்லை. எனவே, நாம் வாங்கும் பழத்தில் உள்ள விதைகளை வீணாக்காமல் அவற்றைச் சேமித்துவைத்துச் சாப்பிடலாம். ஆரோக்கியமில்லாத எண்ணெய்களில் பொரித்த தின்பண்டங்களைச் சாப்பிடுவதற்குப் பதிலாக, கோடைக்காலத்தில் எளிதாகக் கிடைக்கும் தர்பூசணி விதைகளைப் பயன்படுத்தி சிற்றுண்டிகள் செய்து சாப்பிடலாம்!

நன்றி :விகடன் ஹெல்த்

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...